Sunday, October 3, 2010

எந்திரன்


ரசிகர்கள், சினிமா விரும்பிகளின் தேடலுக்கும் பசிக்கும் சரியான மெகா விருந்து எந்திரன்.

படத்தில் ரஜினியின் பங்களிப்பைப் பாராட்டுவதா, ஷங்கரின் அசுர உழைப்பைப் புகழ்வதா... ஐஸ்வர்யா ராயின் இதயம் வருடும் அழகை வர்ணிப்பதா..இப்படி, விமர்சனம் எழுதுபவர்களுக்கு சவால்விடும் சமாச்சாரங்கள் ஏராளம். இந்தப் படத்தின் மையக் கருவை ரொம்ப சிம்பிளாக ஒரு வரியில் சொல்வதென்னால்.. விஞ்ஞான படமாக இருந்தாலும் பக்கா ஜனரஞ்சகமான ஒரு கமர்சியல் படம்தான் எந்திரன்.

ரஜினி(வசீகரன்), விஞ்ஞானி, தனது 10 வருட உழைப்பால் ஒரு ரோபோவை(சிட்டி, ஆன்ட்ரோ ஹ்யூமனாய்டு) உருவாக்குகிறார். சிட்டியை நூறு ராணுவ வீரர்களுக்கு சமமான இயந்திர மனிதனாய் மாற்றி இந்திய ராணுவத்திற்கு உபயோகப்படும் வகையில் அரிய செயல்களைச் செயல்படுத்துவதே அவரது லட்சியம். உணர்ச்சியற்ற எந்திரத்தின் உணர்ச்சிகளை மெல்ல மெல்ல வர வைக்கிறார். இதற்கு உதவுகிறார் மருத்துவக் கல்லூரி மாணவியும், வசீகரனின் காதலியுமான ஜஸ்வர்யா ராய்(சனா). உயிரற்ற சிட்டிக்கு உணர்ச்சியின் உச்சமான காதல் உதயமாகும் போது கதையில் திருப்பம் ஏற்படுகிறது. தான் உருவாக்கிய சிட்டியே தன் காதலுக்கு உலை வைக்கும் நிலை ஏற்பட்டதால் கை கால்களை உடைத்து குப்பையில் எறிகிறார். அதே நேரத்தில் ஆராய்ச்சி கழகத்தின் பேராசிரியராக இருக்கும் ரஜினி இதே போல ஒரு ரோபோவை உருவாக்குகிறார். அதில் தோல்வி அடைந்த பேராசிரியர் ரஜினி, வசீகரன் மேல் பொறாமை கொள்கிறார். இச்சமயத்தில், பேராசிரியர் ரஜினியிடம் கிடைத்த சிட்டி விஸ்வரூபம் எடுத்து வில்லத்தனம் செய்கிறான். ரோபோவிடமிருந்து தன் காதலியை மீட்டாரா? ரோபோவின் வில்லத்தனத்தை சமாளித்தாரா? அந்த ரோபோ காதல் தோல்வியிலிருந்து மீண்டதா? என்பது யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத க்ளைமாக்ஸ்.

நிச்சயமாக பொழுதுபோக்கிற்காகவும் மகிழ்ச்சிக்காவும் திரையரங்கிற்கு வருபவர்களை எந்திரன் 100 சதவீதம் திருப்திப்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. ஒவ்வொரு ரஜினி ரசிகனும் பலதடவைகள் திரையங்குகளில் எந்திரனை தரிசிக்கபோவது உறுதி, இது நடுநிலை ரசிகர்களுக்கும் பொருந்தும். மூன்று விதமான வேடங்களில் நடித்திருக்கும் ரஜினி மூன்று வேடங்களுக்கும் உடல்மொழி, வசன உச்சரிப்பு, மானரிசம் போன்றவற்றில் சிறப்பான முறையில் வேறுபாடுகாட்டி கலக்கியுள்ளார்.

ரஜினியின் நடிப்புக்கு நீண்டநாட்களுக்கு பின்னர் கிடைத்துள்ள தீனிதான் இந்த படம். எந்தப் படத்திலும் இல்லாத அளவுக்கு அழகாக இருக்கிறார் ரஜினி. இந்த மனிதரை இதற்கு முன் யாருமே இத்தனை அற்புதமாகக் காட்டியதில்லை. விஞ்ஞானியாக நடிக்கும் போது தனது நடிப்பின் அனுபவத்தை அழகாக பிரதிபலித்திருக்கிறார். அதே ரஜினி, சாதுவான ரோபோவிற்கும், விஸ்வரூப ரோபோவிற்கும் நடிப்பு மூலம் வேறுபடுத்தி நடிப்பில் உச்ச கட்டத்தை எட்டியுள்ளார்

No comments: